வெள்ளி, 27 ஜூலை, 2012

“உண்மையிலேயே நீண்ட கதை”


“உண்மையிலேயே நீஈஈஈஈண்ட கதை”

ரொம்ப நாளைக்கு முன்னாடி..... அப்போ எங்க ஊர் கவுர்மெண்ட் ஸ்கூலில் நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். (ஹி...ஹி.. இப்போவும் அவ்வளவுதான் படிப்பு).  உண்மையிலேயே ஒரு நல்ல வாத்தியார் அங்க இருந்தார்.  எங்களுக்கு சயின்ஸ் பாடம் எடுப்பார்.

அவர்கிட்ட ஒரு வித்தியாசமான பழக்கம் இருந்தது.  தினமும் அவர் வகுப்பில் பாடம் நடத்த தொடங்குவதற்கு முன் பசங்களோட கவனம் சிதறாம இருக்கனும் என்பதற்காக ஒரு கதை சொல்வார்.  பெரும்பாலும் அறிவுரை சொல்ற மாதிரிதான் இருக்கும்.  கொஞ்சம் நாள் கழித்து கடைசி பென்ச் பசங்க (நாங்க தாங்க) வாத்தியார் கதை சொல்லி முடித்ததும், சார் கதை ரொம்ப நல்லா இருந்தது சார்.... இன்னொரு கதை சொல்லுங்க என்போம்.  வாத்தியாரும், அவரு மனநிலை நல்லா இருந்தா  இன்னொரு கதை சொல்வாரு.  அப்டி இல்லன்னா இன்னைக்கு இவ்வளவு கதை போதும் புத்தகத்த எடுங்க என்று சொல்லி பாடத்த நடத்த ஆரம்பித்து விடுவார்.


இந்த மாதிரி போய்க்கொண்டிருந்த போது, வாத்தியார் எங்களோட உண்மையான நோக்கத்த (அதாங்க.... கதை சொல்ல வெச்சே பீரியட ஓட்டிடலாம் என்கிற திட்டத்தைத்தான்) கண்டுபிடித்துவிட்டிருப்பார் போல.  வழக்கம்போல அவர் கதை சொல்லி முடித்ததும், சார்..... இன்னொரு பெரிய கதை சொல்லுங்க என்றோம்.  அவரும், சரிங்கடா கதையை கேளுங்க என்று சொல்ல ஆரம்பித்தார்.  என்ன நீங்களும் ரெடிதானே?  “ஒரு ஊருல ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு பண்ணையாருக்கு சொந்தமா ஒரு வயல் இருந்ததாம். (பண்ணையாருக்கு ஒரே ஒரு வயல்தான் சொந்தமான்னு சோசலிஸமெல்லாம் பேசப்படாது) அந்த வயலில நெல்லு நடவு செஞ்சிருந்தாங்களாம்.  அந்த நெற்பயிரெல்லாம் நல்லா வௌஞ்சி நெல்மணிகளோட கதிர் நெறைய இருந்திச்சாம்.  அந்த  ஊருல நெறைய சிட்டுக் குருவிங்களாம் இருந்திச்சாம். அந்த சிட்டுக் குருவிங்களாம் வயலில நெல்லு வௌஞ்சிருக்கறத தெரிஞ்சிக்கிட்டு அந்த வயலுக்கு வந்திச்சாம்.  முதல் சிட்டுக் குருவி போய் ஒரு நெல்மணியை கொத்திக்கொண்டு போயிடுச்சாம். அப்புறம் இரண்டாவது சிட்டுக் குருவி போய்  இரண்டாவது  நெல்மணியை கொத்திக்கொண்டு  போயிடுச்சாம் அப்புறம் மூன்றாவது சிட்டுக் குருவி போய்  மூன்றாவது நெல்மணியை கொத்திக்கொண்டு  போயிடுச்சாம். பிறகு நான்காவது சிட்டுக் குருவி போய்   நான்காவது நெல்மணியை கொத்திக்கொண்டு போயிடுச்சாம்...........” இப்படி சொல்லிக்கொண்டு போய்க்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏ........... இருந்தார்.   அய்யய்யோ சார் கதை போதும் சார் என்று நாங்கள் வாத்தியாரை நிறுத்தினோம்.  அத்தோடு சரி.... நாங்கள் அவரை “இன்னொரு... கதை... சொல்லுங்க... ” என்று அதன்பிறகு கேட்கவேயில்லை.  உங்களுக்கு கேட்கனும்னு தோன்றுதா?

திங்கள், 2 ஜனவரி, 2012

காடு காட்டுகிறான்


"காடு காட்டுகிறான்"

     ரொம்ப நாளாக எனக்கு ஒரு சந்தேகம், உங்களுக்கு கூட வந்திருக்கும். உங்க ஊர் கடலூர், விழுப்புரம்,  செங்கல்பட்டு மாதிரி வடக்கு மாவட்டமாக இருந்தால் இந்த வார்த்தையை பொதுவாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்னவா? “என்ன ஒரேயடியாகக் காடு காட்டுகிறான்”.   இது என்ன காடு? அத எதுக்கு காட்டனும் அல்லது காட்டக்கூடாது?  அந்த காட்டை காட்டினா அப்படி என்ன தப்புன்னு  எனக்கு ரொம்ப நாளாகவே புரியாத புதிராக இருந்துச்சு. எப்படியோ ஒரு வழியாக சமீபத்தில் அதற்கு விடை கிடைச்சிடுச்சி. 

1.     அதாவது கொஞ்ச நாளைக்கு முன்னால, நீண்ட நாளாகப் பார்க்காத நண்பர் ஒருவரை, ஊர்சுத்த போகும்போது பார்க்க நேர்ந்தது.  நண்பர் பரவாயில்லை, எனக்கு நண்பராயிருந்தும் ஒருவழியா உழைத்து முன்னேறி சொந்தமா தொழிற்சாலை நடத்தி வருகிறார்.  நலம் விசாரித்துவிட்டு தன்னுடைய முகவரியடங்கிய ரொம்ப அழகான ஒரு அட்டையைக் கொடுத்துவிட்டு நேரம் கிடைக்கும்போது அவசியம் வர வேண்டுமென்று சொல்லி விடை பெற்றார்.    எனக்கும் ஊர் சுத்தற வேலை அதிகமாக இருந்ததால் போக முடியவில்லை.  சமீபத்தில் அந்த ஊர் வழியா போகும் போது நண்பரின் தொழிற்சாலை ஞாபகம் வரவே அங்கு நுழைந்தேன்.  பார்த்தால் மிகப்பெரிய கதவுடன் கூடிய கேட்.  எப்படியும் ஒரு கூர்க்கா இந்தியில் “கியா... மியா” (ஒருவேளை இந்தி தெரியாததாலதான் தமிழ்க்காரங்களுக்கு கூர்க்கா ஆளுங்க மாதிரி(?!) வீரம், வெண்டைக்காய், வெள்ளைப்பூண்டு எல்லாம் இல்லையோ? இந்தி தெரிஞ்சிக்கிட்டா வேலை கிடைக்கும்னு சொல்வாங்கல்ல.. அது மாதிரி.... இந்தி தெரிஞ்சிக்கி்ட்டா வீரம் வரும்... இதுகூட கேட்கறதுக்கு நல்லா இருக்கில்ல..... இந்திய அரசு கவனிக்கவும்)  என்று சத்தம் போடுவான் என்று பார்த்தால், நல்ல வேலையாக நம்மூர் ஆள், “என்ன வேண்டும்?” என்று கேட்டான். நானும் சொன்னேன். அவன், சார் ஆடிட்டர் வந்திருக்கிறதால ரொம்ப பிஸியாக இருக்கிறார்னு சொன்னான். நானும் சரி வேறு ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு, எதற்கும் நம்முடைய சட்டை பாக்கெட்டில் நண்பர் முன்பு கொடுத்த கார்டு இருக்கிறதா என நினைத்து பார்த்த போது......... கரெக்ட்....நீங்க நினைக்கிறது போல..........கார்டு இருந்தது.  அதை நம்ம கேட் ஆசாமி கிட்டே காட்டின உடனே அவன், சார் உங்களுக்கு ரொம்ப பழக்கமா சார்? என்று ஒரு சார் போட்டு கேட்டுவிட்டு பிறகு நண்பரிடம் இண்டர்காமில் விவரம் சொல்லி உள்ளேவிட்டதும் பிறகு நண்பரை சந்தித்ததும் வேறு கதை.  இதில் நீங்க கவனிக்க வேண்டியது இந்த கார்டைத் தான்.

2.      வேறொரு நாள். இதேமாதிரி வேறொரு பெரிய கேட்டில் வேறொரு கேட் கீப்பர்.  இடம் அரசு மகப்பேறு மருத்துவமனை.  உறவினரின் மருமகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு குழந்தையைப் பார்க்கலாம் என்று மருத்துவமனைக்கு சென்ற போது பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது, நாளை வந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் (?) அந்த காவலாளி சொல்லி விட, என்னுடைய அறிவாளி மூளையில் (?) அந்த யோசனை தோன்றியது.  பாக்கெட்டில் இருந்த “இவர் ஒரு பெரிய்யய ஊர் சுற்றி” என்ற என்னுடைய அடையாள கார்டை காண்பித்தேன். அந்த காவலாளி எதுவும் பேசாமல் என்னை மேலும் கீழும் ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு ஒரு வழியாக மருத்துவமனைக்குள் விட்டான். இதிலும் நீங்க கவனிக்க வேண்டியது இந்த கார்டைத் தான்.

   இப்படி இந்த கார்டு தமிழனுடைய வாழ்க்கையில மிக மிக முக்கியமான விஷயமா ஆகிப்போனதால தான்........... இந்த “ஒரேயடியாகக் காடு காட்டுகிறான்”  என்ற சொலவடை வந்திருக்கும் என்பதுதான்..... இந்த உலகமகா புத்திசாலியின் (ஹி....ஹி.... நான்தாங்க....) மிக மிக அரிய கண்டுபிடிப்பு. என்ன சரிதானே நண்பர்களே?

மனைவி

மனைவி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாளா என்று நாம் வாங்கும் அடி சொல்லி விடுகிறது.